Friday, December 8, 2006

அது ஒரு கனாக்காலம் - 7

அது ஒரு கனாக்காலம் - 7.

எப்படியோ என்னை இரண்டாம் வகுப்பிலிருந்து மூணாப்புக்குத் தூக்கிப்போட்டுட்டாங்க... ஒரே சந்தோஷம்... !!!!

யாருக்கு...?

வாத்தியாருக்கு சந்தோஷம்... "அப்பாடா ஒரு வழியா நம்ம கடமை முடிஞ்சது இனி மூணாப்பு வாத்தியார் பாடு பசங்க பாடு..." என்று சந்தோஷம்...

எங்களுக்கோ இந்த வாத்தியார் ட்ட் இருந்து விடுதலை அப்டீனெல்லாம் இல்லை... ஆனா ஒரே சந்தோஷம்...

ஏன்னா --

ரெண்டாப்பு ஓட்டு பள்ளிக்கூடம். மெயின் எடத்துல இருக்கு... ஊன்னா ஒடனே எல்லோருக்கும் தெரிஞ்சிடும்.... ஒடனே ஒரு விசாரணை கமிஷன் வரும்...

ஆனா மூணாப்பு அப்டியில்லை... கொஞ்சம் வெளியே... தோப்புக்கு அந்தப் பக்கம்... மெயின் பில்டிங்க்கு கொஞ்சம் தள்ளி... அதுனால அங்கே என்ன செஞ்சாலும் யாருக்கும் தெரியாது...

அதனோட முகப்பு கெழக்க நோக்கி இருக்கும்... ஸ்கூலோ வேற தெசயில.... எங்க மூணாப்புக்கு முன்னாடி ஒரு ஊருணி (பார் வேந்தே... என் எழுத்து திருந்தியதைப் பார் வேந்தே... வேந்தன் ஐயா... மன்னிச்சுக்கோங்க.. ஒருமையில் சொன்னதுக்கு... நாகேஷ் ஸ்டைல்ல... இருக்கா...!!!) இருக்கும்... ரொம்ப நீளமான கரை...

அதான் புதூருக்கு போற ரோடும்கூட... பெயர் தெரியாத பறவைகள் உலாவரும்...
நிறைய நாரைகள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்.... பின்ன்ர் ஒரு நாள் வாத்தியார் (மூணாப்ல தான்..) தமிழ்ல , "ஓடு மீன் ஓட... வாடியிருக்குமாம் கொக்கு"ன்னு ஒரு பாட்டு வருமே... அத நடத்றப்ப அந்த காட்சிய பலதடவ நேரடியாவே பாத்ததால,

'பூ இது ஒரு பெரிய விஷயமா...? இதப்போயி மெனக்கெட்டு பழைய தமிழ் புலவர்கள் வேலை இல்லாம எழுதி வச்சிட்டாங்களே...இவங்க எழுதினதெல்லாம் நாம மனப்பாடம் பன்ணித்தொலக்கணுமே..."னு திட்டிட்ருந்தோம்.... அப்ப மனப்பாடச் செய்யுள் னு ஒண்ணு இருக்கும்... அத அப்டியே படிச்சி புத்தகத்ல இருக்கற மாதிரி எழுதணுமாம்..

அதாவது காப்பி அடிக்கணும். ஆனா புத்தகத்த பாக்காம காப்பி அடிக்கணும் அதான் விஷயமே... ஏன் புத்தகத்தை பாத்து அடிச்சா திட்றாங்கன்னே புரியல. மொத்தத்துல எல்லாமே காப்பிதானே...

இதுல புத்தகத்தை பாக்காம எழுதுறது ஒசந்த காப்பி. பாத்து எழுதுறது சாதா காப்பின்னு ஓட்டல் கணக்கா என்ன வேண்டிக்கெடக்கு...? ஆக மொத்தத்துல காப்பி காப்பிதானுங்க... நம்ம சிஸ்டமே தப்புன்னு அப்ப பட்டுச்சு...

அந்த கூரைப்பள்ளிக்கூடத்ல மூணாப்பும் நாலாப்பும் இருக்கும். அவங்க கிளாஸ் கிருஷ்ணன் கோயிலை நோக்கி இருக்கும். எங்க கிளாஸ் ரோட்டை பாத்திருக்கும். அதனால பாடம் நொழயலைன்னா ரோட்டையும் ஊருணியையும் ஜாலியா வேடிக்கை பாக்கலாம்...அப்டி ஒரு வசதி... அதான் மூணாப்புக்கு போறதில ஒரே சந்தோசம்...!

மேற்கொண்டு நம்ம ராமசாமி வாத்தியார்தான் கிளாஸ் வாத்தியார். இவர் மோகன்னோட அப்பாதான். அதனால ஒரு பிரச்னையும் இல்ல.

இவரு அவ்வளவா பசங்கள ரெண்டாப்பு தொள்ளக்காது வாத்தியார் (இவரது உண்மையான பெயர் சீனிவாசன். காதில் பெரிய துளைகளிருந்ததால் இந்த பெயரிலேயே ஊரில் அனைவரும் அழைத்தனர்) மாதிரியெல்லாம் அடிக்க மாட்டார்.

அட மோகன் என்னவிட மூணு வகுப்பு மேல படிக்ற சீனியர். சட்டாம்பிள்ளை.. இப்டி... எங்களோட ஆதர்ஷ நண்பன்.. நாங்க எப்பவுமே சீனியர்களோடதான் சிநேகம்...

ஒரு தடவ வாத்தியார் ரொம்ப சீரியசா பாடம் நடத்திட்ருந்தார்.. இந்த டிங்கு பய பாடத்த கவனிக்கல.... நொழயல...

அது கூரைப்பல்ளிக்கூடமா... அதனால அவனால ஜாலியா இருக்க முடிஞ்சது... மேல விட்டத்த பாத்தான். அங்கன ஒரு அணில் புதுசா அந்த மூங்கில் விட்டத்த ஓட்ட போட்டு ஒரு வலய ரெடி பண்ணிட்ருந்துச்சு...

ஆஹா எல்லா பயபுள்ளகளும் கரட்டாண்டி புடிச்சி வெளயாட்றானுங்களே.. பாவம் அது... அத இம்சை பண்றாங்களே... அதுக்கு பதிலா இந்த அணில் அண்ணாகிட்ட வெளயாடின்னா எவ்ளோ நல்லாருக்கும்... இது ராமருக்கு பாலம் கட்ட ஒதவிச்சாமே...

இதோட சிநேகம் கெடச்சா நம்ம ராமர் சாமிட்ட் சொல்லி நமக்கு கொஞ்சம் படிப்பு வர்ர மாரி எதாச்சும் பண்ண சொல்லலாமே...

படிப்பு வல்லைன்னா ஸ்கூல்லயும் கண்ணாபின்னானு திட்றாங்க...வீட்லயும், "குய்யோ ... முறையோ..." னு திட்றாங்க...

அப்டியே இவங்களுக்கும் கொஞ்சம் நல்ல புத்தி கொடுக்கச்சொல்லி அணில் அண்ணாட்ட ராமர்ட்ட ரெக்கமண்ட் பண்ணச்சொல்லணும்... னு இப்டி ஒரு சினிமா எனக்குள்ள ஓடிட்ருந்துச்சு...

வாத்தியாரோ நான் சீரியஸ புரியாம விட்டத்த பாத்த மாதிரி சிந்திக்றேன்னு நெனச்சி -

இன்னொரு தடவ பாடத்தை நடத்தினார். இதெல்லாம் எனக்கு தெரியாது...

என்னோட முழு கவனமும் , "அட இந்த அணில் இன்னிக்குள்ள வீடு கட்டி .முடிச்சுரணுமே..."னு இருந்துச்சு... எப்படியாவது இத சிநேகம் புடிச்சி ராமர்ட்ட இருக்ற வில்லை லவட்டிட்டு வந்துரணும்.

அத வச்சி பத்து தல ராவணனை அடிச்ச மாதிரி

நம்ம கர்லாக் கட்ட மணி ய ஜெயிக்கணும்....(இந்த மணிப்பயல் சேட்டை என்றால் அப்டி ஒரு சேட்டை...எங்க ஜூனியராக படித்தான்.. .

சரியான வாலு.. இவன் ஸ்டைலெ வித்தியாசமா இருக்கும்... கைகளிரண்டும் பின்னால் ஸ்டைலாகக் கட்டிக்கொள்வான் பெரிய மனுசன் மாதிரி...

நல்ல பேசிட்ருக்கும்போதே "கணீர்" னு தலயில ஓங்கி ஒரு குட்டு குட்டிட்டு ஓடிடுவான்...

சில சமயம் கையில சின்ன கட்டய மறச்சி வெச்சிருப்பான்.. அதான் பின்னாடி ஸ்டைலா கைய கட்டிஉக்குவான்... எதிர்பாராத சமயத்தில் பொடேர்னு தலயில போட்டுட்டு ஓடீடுவான்...)

சீனி, குளிப்பாட்டிய (இவர்கள் அப்பொழுது பிரபலமான பில்லா ரங்கா போல் எங்க ஏரியாவுல பெரிய ஆளுங்க) போலீஸ்ல புடிச்சு கொடுத்து தங்கப்பதக்கம் வாங்கனும்னு யோசிச்சேன்....

அப்பவும் அணில் வலய கட்டி முடிக்கல... பாதிதான் முடிச்சிருந்துச்சு... ஏன்னா அதனோட பாதி உடல் பொந்துக்கு வெளியே இருந்துச்சு... இன்னும் முயற்சிகள் பண்ணிட்ருந்துச்சு....

வாத்தியாரோ... , சீரியஸாக, "என்னடா எல்லாம் நொழஞ்சதா...?னு கேட்டார்...

"இன்னும் பாதி நொழயல சார்..." அப்டின்னேன் அப்பாவியா...

திரும்பவும் மொதல்ல இருந்து பொறுமையா நடத்தினார்...

அதற்குள் பக்கத்திலிருந்த சேது நினைவூட்டி என் மானத்தைக் காத்தான்... இப்பொழுது அணில் முழுதும் வெற்றியடைந்துவிட்டது...

வாத்தியார் , "நொழஞ்சதா ...?" என்று கேட்டார்...

" நொழஞ்சது சார்..." என்றேன் விழிப்பாக...
கேள்விகள் கேட்டார்... அதற்குள் கொஞ்சம் கவனித்தபடியால் சேதுவின் உத்வியோடு பதில் சொல்ல முடிந்தது...

கனவு தொடரும்......

(இது கதையல்ல... நிஜ சம்பவமே....)

No comments: