Sunday, December 3, 2006

அது ஒரு கனாக் காலம் - 3

அது ஒரு கனாக் காலம் -3

எங்கள் வீடு குழந்தைச் சோற்றிற்கு பிரபலம்...

குழந்தைகளுக்காகவே தனியாக குழைய சாதம் வடித்து, பருப்பும் வீட்டில் கறந்த பசும்பாலில் செய்த நெய்யும், பிசைந்து குழந்தைகளுக்கு ஊட்டுவர் தாய்மார்கள். அந்த தெருவிலிருக்கும் குழந்தைகளும், தூரத்து தெருக்குழந்தைகளும் இந்த சாதம்தான் ஊட்டவேண்டும் என அடம் பிடிக்கும் அளவிற்கு பிரபலம்...

என் அன்னை அவர்கள் கூட, "நாம் செய்யும் நல்ல செயல்கள்தான் அடுத்த தலைமுறையை நல்ல நிலைக்கு உயர்த்தும். " என்று அடிக்கடி சொல்வார்கள்... ஏழ்மையான விவசாயத்தை நம்பியே ஜீவிக்க வேண்டிய நிலை...

ஒரு முறை ஒரு அன்னை அவர்கள் எங்கள் வீட்டில் வந்து தன் குழந்தைக்கு சாதம் ஊட்டிக்கொண்டிருந்தார்.

அந்தக் குழந்தை சாப்பிட அடம் பிடித்தது....

நான் 'சிவனே' னு அந்தப் பக்கம் போய்க்கொண்டிருந்தேன்....

"அதோ அந்த மாமாகிட்ட சொல்லி உன்னை பூச்சாண்டிகிட்ட பிடிச்சிக்கொடுக்கச் சொல்லிடிவேன்.. ஒழுங்கா சாப்பிடு..." என்று அந்த அன்னை குழந்தைக்கு பயம் ஊட்டினார்.

எனக்குள் ஒரே மகிழ்ச்சி....

"அட நாலாப்பு படிக்றப்பவே நாம் நிஜமாகவே பெரிய ஆளாகி விட்டோமா என்ன...? " என மனம் சிலிர்த்தது.....

உடனே குழந்தையின் அருகே சென்றேன்...

"ஒழுங்கா சாப்பிடு... இல்லே உன்ன பூச்சாண்டிகிட்டே பிடிச்சிகொடுத்ருவே..." என்று மிரட்டல் தொனியில் சொன்னேன்...

குழந்தை என்னையே சிறிது நேரம் உற்றுப்பார்த்த்து...

பின்னர் 'ஓ' வென அழ ஆரம்பித்தது....

எனக்கோ ஒரே மகிழ்ச்சி... அட என்னைப்பார்த்துகூட பயப்படுகின்றனர்...நிஜமாகவே நான் பெரிய பையந்தான்... நாளை ஸ்கூலில் நம் வேலையை இனி தைரியமாய் ஆரம்பிக்கலாம் என்ற என் நினைப்பில் மண் விழுந்தது....

" எனக்கு வெளயாட இப்பவே பூச்சாண்டி புடிச்சி கொடு..." என குழந்தை அழ ஆரம்பித்தது...

நானோ திருடனுக்கு தேள் கொட்டிய கதையாய் திருதிருவென விழிக்கலானேன்...

இதேதடா புது வம்பு... பிள்ளையார் பிடிக்க போய் ஏதோ வந்த கதயாவுள்ள இருக்கு....

பூச்சாண்டி என்றால் குழந்தை பயப்பட வேண்டாமா...? அதுவும் என்னைப் பார்த்துதானா அந்தக் குழந்தை இப்படி கேட்கவேண்டும்...?

குழந்தையின் அடம் அதிகமானது. பூச்சாண்டி இல்லாமல் சாப்பிடமாட்டேன் என்றது...

"நீ சும்மா போகவேண்டியதுதானே... நாம்பாட்ல அத சமாதானப்படுத்தி சாப்பிடவெச்சிருப்பேன்ல... இப்டி பண்ணிட்டியே...." என கோபமாக என்னை அடிக்க விரட்டினார் அந்த அன்னை.

நானோ பின்னங்கால்கள் பிடரியில் பட, "குய்யோ... முறையோ..." என ஓடலானேன்....

கனவு தொடரும்.....

No comments: