Tuesday, December 5, 2006

அது ஒரு கனாக்காலம் - 6

அது ஒரு கனாக் காலம் - 6

மூன்றாம் வகுப்பு படிக்கும்பொழுதுதான் ஆங்கிலம் என்ற ஒரு பாடம் படிக்கவேண்டிய விஷயமே தெரிய வந்தது...

அப்பொழுதுதான் தமிழில் அ ,ஆ என்று சொல்ல ஆரம்பித்திருந்தோம்... அதற்குள் இப்படி ஒரு சாக்கை கொடுக்க வேண்டுமா ... ?

ஒரு வேளை நாங்கள் அ.. ஆ... என்று சொல்லியதே தமிழில் மிகப்பெரிய படிப்பு என்று அரசு நினைத்துவிட்டதா...? இல்லை எங்கள் மர மண்டையில் ஏறவில்லையா...? இல்லை கிராம்த்திலிருக்கும் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்புவரை இவ்வளவுதான் syllabus ஆ...? ஆனால் நிறைய பாடல்கள் இருந்தன...

இந்த டிக்டேஷன் என்ற ஒன்றை யார் கண்டுபிடித்ததோ தெரியவில்லை... அவன் மட்டும் அப்பொழுது (இரண்டாம் வகுப்பில்) எங்கள் கைகளில் கிடைத்திருக்கவேண்டும்.... !!!???

அவனும் எங்களோடு சேர்ந்து அந்த தொள்ளக்காது (துளை + காது) வாத்தியார்ட்ட செமத்தியா அடிவாங்கிருப்பான்...

ஆங்கிலம் மண்டையில் ஏறவில்லை... எனக்கு மட்டுமல்ல , எங்கள் வகுப்பில் எல்லோருக்கும்தான்... இனிமேல் ஆங்கில சொற்களை பயன்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள்...

நாலாப்பில (நான்காம் வகுப்பு) விஜயா டீச்சர்தான் எங்களுக்கு கிளாஸ் டீச்சர்... கேள்வி கேட்டு பதில் சொல்லத் தெரியலையா... அடி மொத்து... அடின்னா அப்டி ஒரு அடி... ஜென்மத்துக்கும் மறக்க முடியாது...

அடிஸ்கேலை திருப்பிவச்சி நம்ம உள்ளங்கைய திருப்பிவச்சு அடிப்பாங்க. எப்டியெல்லாம் அடிச்சா பசங்களுக்கு வலிக்கும் னு நம்ம சிவா ஐஐடி யில பி.ஹெச் டி பண்ற மாதிரி அதவிட பெரிசா தெனம் புதுசு புதுசா கண்டுபிடிச்சி கண்டுபிடிச்சி அடிப்பாங்க...

நம்ம கையோட ஒரிஜினல் சைசு பண்ணு மாதிரி (BUN , காய்ச்சல் வர்ரப்ப எங்க ஊரு புளுகாண்டி கடையில வாங்கிக் கொடுப்பாங்கள்ள அந்த பண்ணுதான்) வீங்கீடும்... இந்த டீச்சர்கிட்ட மட்டும் நாலு வருஷம் படிக்க வேண்டியதாப் போச்சு....

"என்ன நாலு வருஷமா ஒரே வகுப்புலயா படிப்பே" னு நீங்க கேள்வி கேக்கப்போறீங்கனு தெரியுது...

அந்த தப்பெல்லாம் வாத்தியார்கள் செய்யமாட்டாங்க... ஏன்னா அடுத்த வருஷமும் இந்தப் பசங்கள நாம எப்டிரா சமாளிக்கிறது னு அவங்களும் யோசிப்பாங்கல்லே... அதனால என்னையும், சேது, லட்சுமண தாசை யெல்லாம் பாசாக்கிறுவாங்க.....

இந்த பாசாகுற படலம் ஒண்ணாங்கிளாசுலயிருந்து கடேசியா படிச்ச NITIE,Bombay வரைக்கும் தொடர்ந்துச்சு....

அந்த டீச்சர் மூணாப்ல கணக்கு சொல்லிக்கொடுக்க வந்தாங்க...
நாலாப்ல க்ளாஸ் டீச்சர்... (க்ளாஸ் டீச்சர்னா நம்ம டி.ராஜேந்தர் மாதிரி எல்லா பாடத்தையும் அவங்களே நடத்தீருவாக... நம்ம நிலைமய அப்ப யோசிச்சி பாருங்க...)

சரி நான் சொல்ல வந்ததை மறந்துட்டேனே....
நமக்கு படிப்பு மண்டையில ஏறாததால எப்டிட்ரா காலத்தை ஓட்றதுன்னு யோசிச்சோம்...

வாத்தியார்களுக்கு வேலை செஞ்சி அவங்ககிட்ட நல்ல பையன்னு பேர் வாங்குறது சகஜம்... ஆனாலும் இதெல்லாம் விஜயா டீச்சர்ட்ட நடக்காது... ஆனாலும் "எள்ளுன்னா எண்ணெய்" னு நிப்போம்...

"Good After Noon Madam அப்டீன்னு சொல்லனும் மதியம் நான் க்ளாஸ் ல நொளைஞ்ச ஒடனே ..." அப்டீன்னு சொன்னாங்க அந்த டீச்சர்...
அத என்னால, "டுக்குட்டு ஆபுட்டர் நூஹ்ன் மேடம்..." என்றுதான் சொல்லமுடிந்தது...

அப்ப நுழையல... எங்க இங்கிலீஷ் இப்டித்தான் இருந்துச்சு..... ஒண்ணுமே புரியல...

ஒரு நாள் விஜயா டீச்சர் பாடம் நடத்திட்ருந்தாங்க... வழக்கமா கேள்வி கேட்டாங்க... இவங்க எப்பவுமே... வரிசைப்படிதான் கேள்வி கேப்பாங்க... இந்த தடவ கடேசி பெஞ்சிலருந்து கேட்டாங்க...

ஜனகராஜ்,சின்னப்பன் (இவனது உண்மையான் பெயர் திருவேங்கடரமணன்..), செளந்தரராஜன் எல்லா பையகளும் வசமா மாட்டிக்கிட்டாங்க... திரு திரு னு முழிச்சாங்க...

பொம்பளப் புள்ளகலோ எங்களப் பாத்து நக்கல சிரிச்சாங்க...

நானோ மொத பெஞ்சு... அதனால ஒதவ முடியாமப் போச்சு...
டீச்சரோட கோபத்த எப்ப்டியாவது தணிக்கணும் னு தோணிச்சு... இல்லேன்னா எல்லோரும் காலி...

"Last Bench Get Out..." னு இங்கிலீசுல சொன்னாங்க...

எப்டியாவது டீச்சரோட கோபத்த தணிச்சா போதும் னு நெனச்சோம்...
அவங்க அப்டி சொன்ன ஒடனே நானும் சேதுவும் ஓடிப்போயி அந்த கடேசி பெஞ்ச்சை அளுக்கொரு பக்கம் பிடிச்சி வெளியே கொண்டு போனோம்...

வராண்டாவ தாண்டியாச்சு.... சேது அங்கயே வெக்கப்போனான்... நானோ டீச்சரோட வார்த்தைக்கு மருவாதை கொடுக்கணும்னுட்டு இன்னும் வராண்டாவ விட்டு கீழே இறங்கி அங்கன இருந்த நிலவெளியில வெச்சிட்டு கிளாசுக்குள்ள வந்தோம்...

டீச்சரோட சொல்லுக்கு கீழ்படிஞ்சிட்டோம்... இனிமே நம்மல, "இவன் ரொம்ப நல்லவம்ப்பா..."னு சொல்லுவாங்கன்னு நெனச்சி கிளாசுக்குள்ள சந்தோசமா நொழைஞ்சோம்....

டீச்சரோ, "அட கோமாளி ராமா..."னு கொல்னு சிரிச்சாங்க...

எங்களுக்கு ஒண்ணுமே புரியல... எதோ கோக்கு மாக்கு நடந்திருச்சுபோல னு என்னடா ஆச்சுன்னு கிளாசுலேயே நல்லா படிக்ற பயகளோட மொகத்த பாத்தோம்.

அவங்களும் எங்கள மாதிரியே, "ங்எ" னு முழிச்சாங்க.....

இப்டித்தான் கஷ்டப்பட்டு இங்கிலீசு படிச்சோம்...
கனவு தொடரும்.........................

No comments: