Sunday, December 3, 2006

அது ஒரு கனாக் காலம் - 2.

அது ஒரு கனாக் காலம் - 2.

தாத்தா தூரத்தில் வந்து கொண்டிருந்தார். சிறுவனை நீரில் நன்கு முக்கி எடுத்து கரையில் கிடத்தினான் கண்ணதாசன்.

அவனோ "குய்யோ... முறையோ..." என்று கூச்சலிட்டான்...

"தாத்தாவிடம் சொல்லி அடி வாங்கித்தருவேன்..." என்றான்.

தாத்தா வேறு வெகு அருகில் வந்துவிட்டார். ஏதோ அசம்பாவிதம் நடப்பதாய் அவர் ஊகித்துவிட்டார்.

என் இதயமோ, "லப்... டப்" ற்கு பதிலாக "போச்சு...தொலைந்தாய்..." என்று நிமிடத்திற்கு 62 முறைக்குப் பதிலாக நொடிக்கு 72 முறை துடிக்க ஆரம்பித்துவிட்டது.....!

கண்ணதாசன் சரெலென சிறுவனின் சட்டையக் கழற்றி அவனது வயிற்றில்
தன் உள்ளங்கையை வைத்து அழுத்தி,

"ம்... தண்ணியை துப்பு கண்ணா..." என்று பல்டி அடித்தான்...

"கண்ணா கண்ணைத் தொற... கண்ணு முழிச்சி பாரு... யாரு வந்துருக்கான்னு பாரு..." என்றனர் சேதுவும், இலட்சுமணனும் தன் பங்குக்கு...

தாத்தா தூரத்தில் வரும்பொழுதே, கண்ணதாசன் ஆரம்பித்துவிட்டான்...
"ஐயோ... யாரு பெத்த பிள்ளையோ... " என கூறிக்கொண்டிருந்தான்...

தாத்தா பதறி விட்டார்...
"இவன் எங்க பையன் தான்.. என்ன ஆச்சு...?"

கண்ணதாசன் நடந்ததை விவரிக்க ஆரம்பித்தான்...

"தாத்தா... நாங்க இந்த பக்கம் அப்டியே காத்து வாங்க வந்தோமா... இந்தப் பையன் தண்ணிக்குள்ள முங்கிட்ருந்தான்... நாங்க கூட, "சரி.., முங்கு நீச்சு அடிச்சி வெளயாடரானாக்கும்"னு இருந்தோம்... கொஞ்ச நேரங்கழிச்சி அவ(ன்) கையி மட்டும் மேல நீட்டுறான்... அப்பவும் நாங்க நம்பல... அவன் ஏதோ வெளயாட்றான்னே நெனச்சோம்... ஆனா முக்கா முக்கா மூணு தடவ முங்கிட்டான்... அப்றமாத்தா தெரிஞ்சது சரி பையன் நீச்ச தெரியாம தண்ணிக்குள்ள விழுந்துட்டான்னு..."

"நல்ல வேளை நாங்க பாக்கலைனா இந்நேரம் என்ன ஆகியிருக்கும்...?" சேது...

தாத்தா கோபமாய் அந்த சிறுவனை அடிக்க முயற்சித்தார்...
"இல்ல தாத்தா.. அவங்க பொய் சொல்றாங்க..." சிறுவன்..

"நான் தண்ணில விழுந்ததை யாரு கிட்ட வேணா சொல்லுங்கண்ணா, ஆனா எங்க தாத்தாகிட்ட மட்டும் சொல்லாதீங்கனு சொன்னான் தாத்தா... அப்றம் எங்க தாத்தா என்னை அடிப்பாருனு சொன்னான் தாத்தா..." கண்ணதாசன்...

தாத்தாவிற்கு ஜிவ்வென்று கோபம் ஏறியது...

"மொளச்சி மூணு இல விடல.. அதுக்குள்ள பொய் வேற சொல்ல ஆரமிபிச்சுட்டயா...? " என அடிக்க கையை ஓங்கினார்...

"விடுங்க தாத்தா... ஏதோ சின்னப்பையன் நீந்தி வெளயாடுனும்னு ஆசைப்பட்டுட்டான்... நாமதான் அவனுக்கு பக்குவமா சொல்லணும் தாத்தா..."

"பார்ரா... இப்பக் கூட அவங்க ஒம்மேல பரிதாபப் படுறாங்க... பகவானே... இவனுக்கு நல்ல புத்தி கொடு... நல்ல சகவாசம் கொடு...."

அவரது வேண்டுகோள் எங்களுக்காக சொன்னதுபோல் பட்டது...

கனவு தொடரும்....

No comments: